பொன்முடி மீதான விசாரணை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குத் தள்ளிவைப்பு!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையைச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.

சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், பொன்முடிக்கு எதிராகச் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், புகார்தாரரான உமா ஆனந்தனிடம் உரிய விசாரணை நடத்தி, அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
பொன்முடி தரப்பின் இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது.
