அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் - பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

 
பள்ளி மாணவர்கள் பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் விதிகளுக்குப் புறம்பாகக் கூடுதல் மற்றும் சிறப்புக் கட்டணங்கள் வசூலிப்பதைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று விசாரித்தது. இந்த விவகாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ள நீதிமன்றம், இது குறித்துத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த 2008-ஆம் ஆண்டே நிதி மற்றும் கட்டணக் கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தமிழக அரசு ஒரு தெளிவான அரசாணையைப் பிறப்பித்திருந்தது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

இருப்பினும் பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகள், அந்த அரசாணையின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகப் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் கட்டணங்களையும், பல்வேறு பெயர்களில் சிறப்புக் கட்டணங்களையும் கட்டாயப்படுத்தி வசூலித்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்க முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசுத் தரப்பை நோக்கிக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தனர்:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஏற்கனவே தெளிவான அரசாணை இருக்கும் போது, அதனையும் மீறி எவ்வாறு பள்ளிகள் சிறப்புக் கட்டணங்களை வசூலிக்க முடிகிறது? விதிமீறல்களில் ஈடுபடும் இத்தகைய பள்ளிகளைக் கண்காணிப்பதிலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் காட்டும் தொய்வு ஏன்?

அதே நேரத்தில், பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கூடுதல் கட்டணங்களால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களே நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்" என்று கடந்த கால உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி வாதிட்டனர்.

பள்ளி புத்தகப்பை விடுமுறை  மாணவர்கள் திறப்பு

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விதியை மீறிக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதை அரசு எவ்வாறு உறுதி செய்யப் போகிறது என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

இது தொடர்பாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய விளக்கங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டு நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.