நாதக கார்த்திகா உட்பட 9 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பரப்புரையின்போது காவல்துறையினரின் பணியைத் தடுத்தது மற்றும் முதல்வர் ரோட் ஷோவிற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி (நாதக) நிர்வாகி கார்த்திகா உள்பட 9 பேருக்குத் தாராபுரம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தாராபுரத்தில் நாதக தரப்பில் வைக்கப்பட்ட பேனரை அகற்ற முயன்ற காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது, முதலமைச்சரின் ரோடு ஷோ சென்ற வழியில் நாதகவினர் இடையூறு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இடைத்தேர்தல் சமயத்தில் முதல்வர் பரப்புரைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா உட்பட 12 நாம் தமிழர் கட்சியினரைக்காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு வழக்குகளைச் சந்தித்து வந்த நாதக நிர்வாகி கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட 4 வழக்குகளிலும் தாராபுரம் நீதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், கைதான எஞ்சிய மற்ற 3 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை அடுத்த நாள் (அக். 23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
