தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் - தவெக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய், தங்களது பெற்றோரைக் கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்துமாறு சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்ததாக எழுந்த புகாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது இறுதிப் பொதுக்கூட்டப் பிரச்சார உரையை ஆற்றினார். அந்த உரையின் போது, அங்கு கூடியிருந்த மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம், "வீட்டில் இருக்கும் உங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களைத் தவெக-விற்குத் தவறாமல் வாக்களிக்கச் சொல்லி நீங்கள் வற்புறுத்த வேண்டும்" என்று அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த உரையைத் தொடர்ந்து, குழந்தைகள் தங்களது குடும்பத்தினரைத் தவெக-விற்கு வாக்களிக்குமாறு நச்சரிக்கும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனைக் குறிப்பிட்டுக் கடலூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் எல்.வாசுகி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
"தேர்தல் அரசியலுக்காகவும், தேர்தல் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாத சிறுார்களைப் பயன்படுத்துவது 'குழந்தைகள் உரிமைகளைப் பறிக்கும் சுரண்டல்' ஆகும். இது தேர்தல் விதிமுறைகளின்படி ஊழல் மற்றும் முறைகேடான நடைமுறையின் கீழ் வரும்" என்று மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீவிரத்தன்மையை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியவை தங்களது விளக்கங்களை உள்ளடக்கிய விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதற்காக, வரும் ஜூலை 1-ஆம் தேதி வரை தவெக தரப்பிற்குக் காலக்கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்திற்குத் தள்ளிவைத்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக புதிய அமைச்சரவையுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய அரசியல் சூழலில், அதன் தேர்தல் பிரச்சார உத்திக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
