யூடியூபர் இர்ஃபான் ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2023-ஆம் ஆண்டு மறைமலைநகர் பகுதியில் சாலையைக் கடந்தபோது பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்கச் சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே உள்ள கோனாதி முரளி நகரைச் சேர்ந்தவர் 55 வயதான பத்மாவதி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். பணி முடிந்த பிறகு மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மீண்டும் பொத்தேரிக்குச் செல்வதற்காக மறைமலைநகரில் உள்ள ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த விலையுயர்ந்த பென்ஸ் கார் எதிர்பாராதவிதமாக பத்மாவதி மீது மோதியது. இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, அந்தச் சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்ஃபானுக்குச் சொந்தமானது என்பதும், விபத்தை ஏற்படுத்திய போது காரை ஓட்டியது சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அசாருதீன் (34) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில், விபத்தில் உயிரிழந்த மூதாட்டி பத்மாவதியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.30.69 லட்சத்தை வழங்க வேண்டும் என்று சிறு வழக்குகள் நீதிமன்றம் தற்போது அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
