குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் முன்னர் தண்ணீர் குறைவாகவே விழுந்து வந்தது. இதனால் அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த லேசான சாரல் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து தற்போது கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் தற்பொழுது சீராகக் கொட்டி வருவதுடன், புலியருவிக்கும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தச் சூழலைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வருகை தரும் ஏராளமான பயணிகள் இந்த அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் செல்கின்றனர். தொடர்ந்து சீரான நீர்வரத்து நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர்.
