உயிராய் வளர்த்த காளையை இழந்த சோகம்... கலப்பையை தோளில் பூட்டி உழுத தம்பதி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
air air

மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் தேவ்னி தாலுகாவைச் சேர்ந்தவர் விவசாயி காசிநாத் கெய்க்வாட். இவருடைய மனைவி அவசாபாய். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது இவர்களது வாழ்வாதாரமாக விளங்கிய காளை மாடு ஒன்று எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் இந்த ஏழை விவசாய தம்பதி செய்வதறியாது திகைத்து பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் தங்களது விவசாய நிலத்தை உடனடியாக உழ வேண்டிய கட்டாயம் இந்த தம்பதிக்கு ஏற்பட்டது. ஆனால் வறுமையின் காரணமாக புதிய காளை மாடு வாங்குவதற்கு இவர்களிடம் போதிய பணம் இல்லை. இதனால் வேறு வழியின்றி மற்றொரு காளையுடன் சேர்த்து விவசாயி காசிநாத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி அவசாபாய் மாறி மாறி தங்கள் தோள்களிலேயே ஏர்க்கலப்பையை பூட்டி நிலத்தை உழுதனர்.

இந்த உருக்கமான காட்சி இணையதளங்களில் வெளியாகி பலரது இதயங்களையும் உலுக்கி வருகிறது. இதனைப் பார்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரோகித் பவார் அந்த ஏழை விவசாய தம்பதிக்கு அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் விவசாயிகளின் துயரத்தை போக்க நிபந்தனையற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.