"ஒட்டுமொத்த தெருவையே விலை பேசும் தேர்தல்" - சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
தனிநபர்களுக்குப் பணம் கொடுப்பதைக் கடந்து, இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களே நேரில் களமிறங்கி ஒட்டுமொத்தத் தெருவையே விலைக்கு வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய தேர்தலில் ஒரு வாக்கிற்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அப்பட்டமாக விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் தற்போது பொதுமக்களின் போன் பே, ஜிபே போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலமாகவே அதிகளவில் நடைபெறுவதாகவும், வாக்காளர்களின் செல்போன்களைச் பரிசோதித்தாலே இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்தின் அடிவேரையே சீரழிக்கும் இத்தகைய படுகேவலமான தேர்தல் முறைகேடுகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலுவாக வலியுறுத்தியுள்ளார்.
