அரசு வேலை வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்!

 
சிபிஎம் கரூர்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தற்காலிகமாக அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகச் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து உயர்மட்ட நீதி விசாரணை மற்றும் காவல்துறை விசாரணை  தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், தவெக அரசு எடுத்துள்ள இந்த அவசர முடிவு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கரூர்

41 பேர் உயிரிழந்ததற்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாகத் தவறுகள் குறித்து முழுமையான விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்குவதாக அறிவிப்பது இந்த வழக்கின் போக்கையும், அதன் தீவிரத் தன்மையையும் நீர்த்துப் போகச் செய்துவிடும்.

விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு முதலில் உருவாக்க வேண்டும். எந்தெந்த விபத்துகளுக்கு, என்னென்ன அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற தெளிவான கொள்கை முடிவு இல்லாமல் இப்படியான அறிவிப்புகளை வெளியிடுவது எதிர்காலத்தில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.

கரூர் விஜய்

எனவே, கரூர் விபத்து குறித்த முழுமையான விசாரணை அறிக்கை நீதிமன்றத்திலும், அரசிடமும் தாக்கல் செய்யப்படும் வரை, இந்த அரசு வேலை வழங்கும் உத்தரவைத் தவெக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பெ. சண்முகம் தனது அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார். கரூரில் நாளை முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் தளத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.