‘போராட்டங்களை ஒடுக்கும் தவெக அரசு’ - சிபிஎம் பெ.சண்முகம் கண்டனம்!
தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களைக் காவல்துறையை ஏவி ஒடுக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்தது கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னையில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களையும் நிர்வாகிகளையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். ஜனநாயக ரீதியிலான போராட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் தவெக அரசின் காவல்துறை செயல்படுவதாகத் தனது அறிக்கையில் பெ. சண்முகம் சாடியுள்ளார்.
