நம்பர் ப்ளேட் கிடையாது... நடுரோட்டில் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்து இளைஞர்கள் அட்டூழியம்! வைரலாகும் வீடியோ!
காரின் மேற்கூரையில் பட்டாசு வெடிக்க வைத்துக்கொண்டே காரில் பயணித்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லிக்கு அருகே குருக்கிராமில் இளைஞர்கள் சிலர் தங்களது எஸ்யூவி காரின் மீது பட்டாசுகளை வெடித்துக் கொண்டு சாலையை அலறவிட்டப்படி சென்றுள்ளனர். இரவு நேரத்தில், வாகனங்கள் அதிகம் உள்ள சாலையில், இயங்கும் காரின் பொனெட் மற்றும் மேற்கூரைகளின் மீது பட்டாசுகளை வெடித்தப்படி இந்த இளைஞர்கள் பயணம் செய்துள்ளனர். அதாவது, வேகமாக இயங்கிக் கொண்டிருந்த காரின் உள்ளே இருந்து ஒருவர் பட்டாசுகளை காரின் பொனெட் மற்றும் ரூஃப்-இல் வைத்து வெடித்தப்படி சென்றுள்ளார். இந்த காட்சிகள் பின்னால் வந்த வேறொரு வாகனத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. வெறும் 14 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை ஆதாரமாக வைத்தே குருக்கிராம் போலீஸார் இந்த செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Unidentified persons booked for bursting crackers from their car: #Gurugram Police. #Viralvideo pic.twitter.com/MocAcsvlUx
— Akshara (@Akshara117) October 19, 2023
ஆனால் உண்மையில், அந்த நபர்களை அடையாளம் காண முடியாமல் போலீஸார் சற்று திண்டாடி வருகின்றனர். ஏனெனில், இந்த செயல் எப்படியிருந்தாலும் போலீஸாரின் பார்வையில் பட்டுவிடும் என முன்கூட்டியே யூகித்த அந்த மர்ம நபர்கள் முன்னெச்சரிக்கையாக காரின் நம்பர் பிளேட்டை கழற்றிவிட்டனர். அதன் பின்னரே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டுவிட கூடாது என்பதற்காக இவ்வாறு அவர்கள் செய்துள்ளதாக குருக்கிராம் மாநகர போக்குவரத்து துணை கமிஷ்னர் விரேந்தர் விஜி தெரிவித்துள்ளார். இருப்பினும், வாகனத்தை வைத்தே அந்த மர்ம நபர்களை பிடிப்பதுதான் போலீஸாரின் பிளான். வீடியோவில் காட்சி தரும் எஸ்யூவி காரின் தோற்றத்தில், நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கும் கார்களின் விபரங்களை அளிக்க மண்டல போக்குவரத்து ஆணையத்திற்கு குருக்கிராம் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த விபரங்கள் கிடைத்த பின், அத்தகைய கார்களை குருக்கிராமில் வாங்கியவர்கள் குறித்த விபரங்களை டீலர்ஷிப் ஷோரூம்கள் மூலமாக பெற்றுக்கொண்டு போலீஸார் தங்களது விசாரணையை துவங்குவர். இவ்வாறான சம்பவம் குருக்கிராமில் நடைபெறுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. கடந்த 2022ஆம் ஆண்டில் கூட அக்.29ஆம் தேதி தீபாவளி சமயத்தின்போது இளைஞர்கள் மூன்று பேர் காருக்குள் இருந்து பட்டாசுகளை கொளுத்தி சாலையில் போட்டவாறு பயணம் செய்தனர். டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதலில், பட்டாசுகளே ஓர் தேவையில்லாத ஆணி. வாகனத்தில் பயணம் செய்யும் போது பட்டாசுகளை வெடிப்பது தவறு என்பதை விட, மூளை உள்ள எவரும் நிச்சயமாக செய்யமாட்டார்கள். ஏனெனில், சாலைகளில் வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அத்தகைய நேரத்தில், யார் மீதாவது பட்டாசு அல்லது அதன் தீப்பொறி பட்டால் பெரும் விபத்து ஏற்பட கூட வாய்ப்புள்ளது.