இன்று உடல் தகனம்... 90 வயது வரை சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத ஆசை!
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உடல் இன்று காலை மதுரையில் தகனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்தாலும், தன்னுடைய உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சாலமன் பாப்பையா தனது உயிலில் குறிப்பிட்டிருக்கிறார். மதுரையில் தலைவர்களும், தமிழறிஞர்களும், பொதுமக்களும் இன்று காலை முதலே சாலமன் பாப்பையாவின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை குறித்து அவரது உதவியாளர் ராஜா தகவல் வெளியிட்டுள்ளார். பாரதியார் குறித்த புத்தகத்தை எழுத வேண்டும் என அவர் தீவிரமாக நினைத்ததாகவும், அதுவே அவரது கடைசி ஆசையாக இருந்ததாகவும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். அந்த ஆசை நிறைவேறும் முன்பே அவர் மறைந்துவிட்டது இலக்கிய உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்த மதத்தைப் பின்பற்றி வந்தாலும் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வாழ்ந்து வந்த சாலமன் பாப்பையா, தனது உடலைத் தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளார். அதன்படி மதுரை தத்தனேரி மின்மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் இன்று பகல் 11 மணிக்கு மேல் நடைபெற உள்ளன.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான அவரது உடல், மக்களின் அஞ்சலிக்காக ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றிய அவர், திருக்குறள், புறநானுறு உட்பட சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். கலைமாமணி (2000) மற்றும் பத்மஸ்ரீ (2021) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
