2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: புதிய ‘சூப்பர் 7’ சுற்று அறிமுகம் - எப்படி கணக்கிடப்படும் - ஒரு பார்வை!

 
உலகக்கோப்பை

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 2027-ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அதிகாரபூர்வ அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இம்முறை போட்டிகளைத் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து கூட்டாக நடத்தவுள்ளன. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், 12 மைதானங்களில் ஒட்டுமொத்தமாக 57 போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, முந்தைய தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் 'சூப்பர் 7' என்ற புதிய வடிவத்தை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே ஒரே லீக் சுற்றில் மோதிய நிலையில், 2027 தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுப் பல்வேறு கட்டங்களாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

முதல் கட்டம் (சூப்பர் சீரிஸ்): சர்வதேச தரவரிசையில் 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள மூன்று அணிகள் முதலில் சூப்பர் சீரிஸ் சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி மட்டுமே அடுத்த கட்டமான குரூப் சுற்றுக்கு முன்னேறும்.

குரூப் சுற்றில் மொத்தம் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன. குரூப் A: இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் சூப்பர் சீரிஸ் மூலம் தகுதிபெறும் ஒரு அணி இடம்பெற்றுள்ளன. குரூப் B: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் மற்றும் மற்றொரு தகுதிபெறும் அணி இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், இரு குழுக்களிலும் அடுத்த சிறந்த சாதனையைப் பதிவு செய்த ஒரு அணியும் சேர்த்து மொத்தம் 7 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கெட்

தகுதி பெற்ற 7 அணிகளும் ரவுண்ட்-ராபின் முறையில் சூப்பர் 7 சுற்றில் ஒன்றையொன்று எதிர்கொள்ளும். இதனால் இந்தச் சுற்றில் மட்டும் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும். இதன் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி: சூப்பர் 7 புள்ளிப்பட்டியலின்படி 1-வது இடம் மற்றும் 4-வது இடமும், 2-வது இடம் மற்றும் 3-வது இடமும் மோதும் வகையில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கோைக்க்காகப் பலப்பரீட்சை நடத்தும்.

வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 21-ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நடத்தும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 12 மைதானங்களில்  57 போட்டிகள் நடைபெற உள்ளன.  பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் சுவாரசியமான 'சூப்பர் 7' சுற்றுடன் களமிறங்கும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.