பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் லக்னோவிடம் பரிதாபத் தோல்வி... ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50 வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய லக்னோ முதலில் பேட்டிங் செய்தது. மழையால் ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. அந்த அணியின் மிட்செல் மார்ஷ் 111 ரன்கள் விளாசி அசத்தினார்.
பெங்களூரு அணிக்கு வெற்றி இலக்காக 19 ஓவர்களில் 213 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்களான கோலி மற்றும் பெத்தேல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். ரஜத் பதிதர் 61 ரன்களும் டிம் டேவிட் 40 ரன்களும் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல போராடினர். இருப்பினும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் பெங்களூரு அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது.
இறுதியில் பெங்களூரு அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. லக்னோ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். தொடர் தோல்விகளுக்குப் பிறகு லக்னோ பெற்ற இந்த வெற்றி அந்த அணியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
