மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி; தலைமை அலுவலகத்தைப் பூட்டிய 58 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் - 144 தடை உத்தரவு!

 
மம்தா

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களாகப் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இன்று வரலாறு காணாத வகையில் வெடித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவரே பதவிய விலகியதைத் தொடர்ந்து, 58 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கொல்கத்தாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றிப் பூட்டுப் போட்டுள்ளதால், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த மூத்த தலைவர் சந்திரா பட்டாச்சார்யா, கட்சித் தலைமை மற்றும் மம்தா பானர்ஜியின் ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தனது பதவியை  ராஜினாமா செய்தார். இந்தத் திடீர் விலகல் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேசிய மற்றும் மாநில அளவில் கடுமையான அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெறுவாரா மம்தா பானர்ஜி? வெற்றி பெற்றால் மட்டுமே மம்தா பானர்ஜி முதலமைச்சர்..

சந்திரா பட்டாச்சார்யாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைந்து தங்களது பலத்தைக் காட்டத் தொடங்கினர். மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்கள் 58 பேர் ஒன்றுதிரண்டு, கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிய அவர்கள், அலுவலகத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பிரதான வாசல்களுக்குப் பூட்டுப் போட்டனர்.

தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியதோடு நிறுத்தாமல், மம்தா பானர்ஜிக்குச் சட்டப்பூர்வமாகச் சவால் விடவும் அதிருப்தி குழுவினர் தயாராகியுள்ளனர். தங்களோடு உள்ள 58 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களுடன், தங்களைத்தான் உண்மையான 'பெரும்பான்மை திரிணாமுல் காங்கிரஸ் குழுவாக' அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அவசரமாக மனு அளித்துள்ளனர்.

முதல்வர் பதவியை தக்கவைத்த மம்தா பானர்ஜி

இந்த அதிரடி நகர்வு காரணமாகக் கட்சியின் அதிகாரப்பூர்வப் பெயரும், 'இரட்டைப் புல்' சின்னமும் முடக்கப்படும் அல்லது அதிருப்தியாளர்கள் கைக்கு மாறும் ஆபத்து உருவாகியுள்ளது.

ஆளுங்கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணப் பிளவு காரணமாக, கொல்கத்தா நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் மம்தா பானர்ஜியின் காளிகாட் இல்லப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.