சீமானுக்கு நெருக்கடி... இடைத்தேர்தல் தோல்வியால் கூட்டணியை நோக்கி நகரும் சூழல்!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போதிய வாக்குகள் பெறாமல் இரு தொகுதிகளிலும் தனது டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள சீமான், கடந்த 4 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும், தேர்தல் களத்தில் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் தோல்விகள் மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள சோர்வு காரணமாக, அடுத்ததாக வரவுள்ள அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் தனித்து நின்று நேரடியாகப் போட்டியிடுவாரா அல்லது பலமான கூட்டணியை நோக்கி நகர்வாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. வழக்கமாகத் தனித்துப் போட்டியிடும் கொள்கையைக் கொண்ட நாம் தமிழர் கட்சி, இந்தச் சூழலில் தனது வியூகத்தை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
