அமைச்சரை விமர்சிப்பது அரசுக்கு எதிரான குற்றமாகாது" - நீதிமன்றம் உத்தரவு!

 
ர

அமைச்சர்களின் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது அரசுக்கு எதிரான குற்றமாகாது எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக வினோத் சூரியகுமார் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துப் பதிவிட்டிருந்தார். இப்பதிவின் காரணமாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்ட முயன்றதாகவும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகவும் கூறி வினோத் சூரியகுமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பழனி

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, சில முக்கியக் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளது.

"அமைச்சர்களை விமர்சிப்பது என்பது அரசுக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகவோ ஆகாது. குறிப்பிட்ட அந்த முகநூல்பதிவு இரு வெவ்வேறு பிரிவினரிடையே விரோதத்தையோ அல்லது பகைமையையோ தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று தெளிவுபடுத்தியது.

பழனி நில மோசடி

அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் குடிமக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.