அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேச விரோதமோ, நக்சலிசமோ அல்ல - ஜவாஹிருல்லா கண்டனம்!

 
மமக தலைவர் ஜவாஹிருல்லா

சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கடுமையாகச் சாடியுள்ளார்.

"நக்சல் மனநிலை கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்" என்று பிரதமர் தனது சுதந்திர தின உரையில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா

அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் 'நக்சல் மனநிலை' கொண்டவர்கள் என முத்திரை குத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

அரசின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது தேச விரோதமோ அல்லது நக்சலிசமோ அல்ல; மாறாகக் கேள்வி கேட்கும் உரிமையைப் பாதுகாப்பதே உண்மையான தேசப்பற்றாகும்.

வக்பு வாரிய சொத்துகள் மீட்டெடுப்பு! ஜவாஹிருல்லா நெகிழ்ச்சி!

கடந்த காலங்களில் "தேச விரோதி", "நகர்ப்புற நக்சல்" போன்ற சொற்கள் அரசைக் கேள்வி கேட்பவர்களை மிரட்டப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போதே பிரதமரே இத்தகைய வார்த்தைகளைப் பேசுவது ஜனநாயகத்திற்குப் பாதகமாக அமையும். நாட்டின் பல்வகைத் தன்மை, கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியைப் பாதுகாப்பதே மத்திய அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பற்ற கருத்தைத் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசை ஜனநாயக ரீதியாக விமர்சிக்கும் மக்களின் உரிமையை மத்திய அரசு மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.