மாமியாரின் இறுதிச்சடங்கில் பயங்கரம் ... நதிக்கரையில் இளைஞரை கடித்துக் குதறி ஆற்றுக்குள் இழுத்துச் சென்ற முதலை... பகீர் வீடியோ!

 
crocodile crocodile

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் சென்ற முப்பது வயது இளைஞர் ஒருவர், நதிக்கரையில் கைகளை கழுவிக் கொண்டிருந்தபோது திடீரென முதலை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபக் என்ற அந்த இளைஞர், தனது மாமியாரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்காகக் குடும்பத்தினருடன் சரயூ நதிக்கரைக்கு வந்துள்ளார். அங்கு அனைத்து சடங்கு ஏற்பாடுகளையும் முறையாக முடித்த பிறகு, ஆற்றுத் தண்ணீரில் கைகளைக் கழுவுவதற்காக அவர் ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது தண்ணீருக்குள் ரகசியமாகப் பதுங்கியிருந்த ஒரு மாபெரும் முதலை, எதிர்பாராத விதமாகப் பாய்ந்து தீபக்கை கவ்விப் பிடித்து ஆழமான பகுதிக்குள் மின்னல் வேகத்தில் இழுத்துச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் துயரமான தாக்குதலைப் பார்த்த உறவினர்கள் அலறியடித்துக் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், உள்ளூர் பொதுமக்களும் இணைந்து ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் தீபக்கின் உடல் முதலையால் சிதைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாமியாரின் இறுதி நிகழ்ச்சிக்காக வந்த மருமகன் முதலையிடம் சிக்கி பலியானது அந்தக் குடும்பத்தினரிடையே ஈடுகட்ட முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் கொடூர சம்பவத்திற்குப் பிறகு, சரயூ நதிக்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.