மாமியாரின் இறுதிச் சடங்கில் பெரும் சோகம்... ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞரை இழுத்துச் சென்ற முதலை!
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் தீபக் சர்மா. இவரது மனைவியின் தாயார் ஊர்மிளா தேவி அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காகக் கோண்டா மாவட்டத்தில் உள்ள உம்ரி என்ற கிராமத்திற்குத் தீபக் சர்மா சென்றுள்ளார். இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு ஊர்மிளா தேவியின் சடலத்தை எரிப்பதற்காக ஆற்றங்கரை அருகே உள்ள மயானத்திற்கு உறவினர்களுடன் தீபக் சர்மாவும் சென்றுள்ளார்.
அங்கு இறுதிச் சடங்கு காரியங்கள் அனைத்தும் முழுமையாக முடிந்த பின்னர், ஆற்றில் இறங்கித் தூய்மையாகக் குளிப்பதற்காகத் தீபக் சர்மா ஆற்றுக்குள் செல்ல முயன்றுள்ளார். அப்போது ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக அங்கிருந்த கிராம மக்கள் அவரை எச்சரித்து ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று தடுத்துள்ளனர். இருப்பினும் கிராம மக்களின் அந்தப் பாதுகாப்பான எச்சரிக்கையையும் மீறித் தீபக் சர்மா ஆற்றில் இறங்கிக் குளிக்க முற்பட்டுள்ளார்.
அவர் ஆற்றில் இறங்கிய அடுத்த சில வினாடிகளில் நீருக்குள் மறைந்திருந்த பெரிய முதலை ஒன்று தீபக் சர்மாவை கொடூரமாகக் கடித்து ஆற்றுக்குள் வேகமாக இழுத்துச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக இது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்ததை அடுத்துப் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபக் சர்மாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரது உடல் இதுவரை கிடைக்காததால் லக்னோவில் இருந்து மாநில மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
