பயிர்க்கடன் தள்ளுபடி.. தமிழக அரசுக்கு ரூ. 5,932 கோடி கூடுதல் செலவு.. கூட்டுறவு வங்கிகளுக்கு 60 நாட்களுக்குள் நிதி செலுத்தப்படும்!

 
விவசாயி விவசாயக்கடன் விவசாயி விவசாயக்கடன்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினால், மாநில அரசுக்குக் கூடுதலாக ரூ. 5,932 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலத்தின் தற்போதைய நிதி நெருக்கடியான சூழலிலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது.

விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடி நிதியுதவி

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளின்படி, தள்ளுபடி செய்யப்படும் இந்த ஒட்டுமொத்த தொகையையும் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும். அதன்படி, தள்ளுபடி தொகையான ரூ. 5,932 கோடியை 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்குத் தமிழக அரசு முழுமையாகச் செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு வங்கிகளின் மூலதன இருப்பு மற்றும் தினசரி பணப் பரிவர்த்தனைகளில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதே அரசின் இந்த விரைவான நடவடிக்கைக்குக் காரணம் ஆகும்.

கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% கடனும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த உத்தரவின் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள 14.43 லட்சம் (14,43,504) குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் நேரடியாகப் பலன் பெறுகின்றனர்.

விவசாயி

இன்று மாலை 5.30 மணிக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், இந்த ரூ. 5,932 கோடி கூடுதல் செலவீனம் மற்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் அதில் முக்கிய விபரங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.