"முதலமைச்சர் விஜய்யை பிரபலப்படுத்தக் கோடிக்கணக்கில் பணம்" - ஆர்.பி. உதயகுமார்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மக்கள் செல்வாக்கை செயற்கையாகக் கட்டமைப்பதற்காகப் பல கோடி ரூபாய் கைமாறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தற்போதைய த.வெ.க. அரசின் முதலமைச்சர் விஜய்யை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் திட்டமிட்டுப் பிரபலப்படுத்தி வருவதன் பின்னணியில் உள்ள ரகசியங்களை அவர் விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே இந்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.
அதில் ஆர்.பி. உதயகுமார், "முதலமைச்சர் விஜய்யின் பாப்புலாரிட்டியைத் திட்டமிட்டு மக்கள் மத்தியில் கட்டமைக்கும் கடமையைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்துவதற்காக, கணக்கு வழக்கே இல்லாமல் பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
உதாரணமாக, 'அவருக்கு என்ன ஒரு மனசு சார்', 'அவர் எவ்வளவு ஸ்டைலாக நடக்கிறார் பாருங்கள்' என்றெல்லாம் தொடர்ந்து ஒரு சில தரப்பினர் அவரைப் பற்றிய பிம்பத்தை மட்டுமே பொதுவெளியில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் மிகப்பெரிய பணப்பரிமாற்றம் நடந்து வருகிறது."
த.வெ.க. அரசு பொறுப்பேற்றது முதலே எதிர்க்கட்சிகள் அதன் நிர்வாகத் திறன் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், முதலமைச்சரின் பிம்பத்தை உயர்த்துவதற்காகப் பல கோடிகள் செலவிடப்படுவதாக அதிமுகவின் மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
