200 காவலர்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி... மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!
சென்னை ராயபுரம் பகுதியில் ஒட்டுமொத்தக் காவல் துறை வட்டாரங்களையே தலைகுனிய வைக்கும் வகையிலான பண மோசடி மற்றும் லஞ்ச ஊழல் விவகாரம் தற்போது அம்பலமாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிரபு மணி என்ற மர்ம ஆசாமி ஒருவர், "மிகக் குறைந்த விலையில் வீட்டுமனைகள் மற்றும் தங்கக்காசுகள் வழங்க உள்ளோம்" என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்துள்ளார். இதை உண்மை என்று நம்பி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களது உழைப்பில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாயைப் பிரபு மணியை நம்பி முதலீடு செய்துள்ளனர். ஆனால், காவலர்களிடம் இருந்து பணத்தை மொத்தமாகச் சுருட்டிய பிரபு மணி, சொன்னபடி நிலத்தையோ அல்லது தங்கக் காசுகளையோ தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட காவலர்கள் கொடுத்தப் புகார்களின் பேரில், துரிதமாகச் செயல்பட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், மோசடி ஆசாமியான பிரபு மணியை அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த மோசடிக்குச் சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வந்த ஷீலா மேரி என்பவர் மிக முக்கியப் பின்னணியாக இருந்து, உடந்தையாகச் செயல்பட்டு வந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமானது.
கைதான பிரபு மணியிடம் இருந்து ஆய்வாளர் ஷீலா மேரிக்குக் கோடிக்கணக்கில் கமிஷன் பணம் கைமாறியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய உயர் பெண் அதிகாரியே, சக காவலர்களை ஏமாற்றக் கொள்ளைக் கும்பலுடன் கைகோர்த்த இந்த விபரீத விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கருதிய சென்னை மாநகரக் காவல் ஆணையர், ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை உடனடியாகப் 'பணியிடை நீக்கம்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
