சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய கூட்டம்... தரிசன வரிசையில் முதியவர் மாரடைப்பால் பலி!
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாதக் கடைசிச் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதற்கிடையே, சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவாபுரி முருகன் கோவில் செவ்வாய்க்கிழமை வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆனி மாதத்தின் இறுதிச் செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது.

விழாவையொட்டி அதிகாலையில் மூலவர் முருகப்பெருமானுக்குப் பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், தேன் மற்றும் ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான நறுமணத் திரவியங்களால் மகா அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமிக்குக் கண்கவர் பூக்களால் 'கல் அங்கி அலங்காரம்' செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பொதுத் தரிசன வரிசையில் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத ஒரு விபரீதம் நிகழ்ந்தது. சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (67) என்ற முதியவர் தனது குடும்பத்தினருடன் வந்து பொதுத் தரிசன வரிசையில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

அருகில் இருந்த பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு, செங்குன்றம் அருகே நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த ராஜேந்திரனின் மருத்துவப் பின்னணி குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான மருத்துவச் சிகிச்சைகள் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது. தற்போது கோவிலில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் சோர்வு காரணமாக அவருக்கு மூன்றாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
