சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை: 8 ஆண்டுகளில் 200-வது சம்பவம்!

 
சிபிஆர் எப்

 

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் (CRPF) சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம், காவல் மற்றும் துணை ராணுவப் படையினரிடையே அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்கள் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 8 ஆண்டுகளில் காவல் மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாமில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

சிஆர்பிஎப் 131-வது பட்டாலியனைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தேவானந்த் யாதவ், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்டாகுடம் முகாமில் பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சக வீரர்கள் அவருக்கு முதலுதவி அளித்து, சுக்மா மாவட்டத்தில் உள்ள எல்மகுண்டா முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த தேவானந்த் யாதவின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

8 ஆண்டுகளில் சுமார் 200 உயிரிழப்புகள்

குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட சிக்கல்கள், மதுப் பழக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவல் மற்றும் துணை ராணுவப் படையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ்தர் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் சிஆர்பிஎப் படையினரின் தற்கொலைச் சம்பவங்கள் குறித்தும் கவனம் அதிகரித்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் 19 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் தகவல் தொடர்பாக ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைச் செயலர் மற்றும் சிஆர்பிஎப் தலைமை இயக்குநரிடம் விரிவான அறிக்கையும் கோரப்பட்டுள்ளது