கோவையில் கொடூரம்... வீட்டிற்குள் கொசு மருந்து அடித்ததால் மூச்சுத்திணறி 2 பேர் பலி; மக்கள் கொதிப்பு!

 
கொசு மருந்து

கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கையாக வீடுகளுக்குள் கொசு மருந்து அடித்த நிலையில், நெடி தாங்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பு தோட்டம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியாகக் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மோகன் (65) மற்றும் ராணி என்ற பிரேமா (75) ஆகிய இருவர் கொசு மருந்து அடித்துச் சில மணி நேரங்களிலேயே கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொசு மருந்து

கொசு ஒழிப்புக்காகத் தெளிக்கப்பட்ட 'பைரத்ரம்' எனும் வேதிப்பொருளின் நெடி வீடுகளுக்குள் அதிகமாகப் பரவியதே இப்பாதிப்பிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஊழியர்கள் குறைந்த தண்ணீரில் அதிகளவு கொசு மருந்தைக் கலந்து தெளித்ததாகவும், வீடுகளுக்குள் அளவுக்கு அதிகமாகப் புகையைச் செலுத்தியதே உயிரிழப்பிற்குக் காரணம் என்றும் கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தோரில் ஒருவர் ஏற்கனவே நுரையீரல் பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதால் நோய் தீவிரமடைந்து இறந்திருக்கலாம் என்றும், கொசு மருந்தினால் நேரடியாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அன்னூர் காவல்துறையினர், உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.