கொடூரம்... கதறிய பெற்றோர்... 3 வயது சிறுமி வெட்டுக்காயங்களுடன் சாக்குப்பையில் சடலமாக மீட்பு!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெட்டுக்காயங்களுடன் 3 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள பூத் பகுதியில், வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி வானியா திடீரெனக் காணாமல் போனார். குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடியும் கிடைக்காததால், இது குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில், அருகிலிருந்த வீட்டில் சாக்குப்பைக்குள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையின் வாயில் துணி திணிக்கப்பட்டிருந்ததாகவும், கையில் வெட்டுக் காயம் இருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாந்திரீகச் சடங்கிற்காகப் பக்கத்து வீட்டில் வசித்த பெண் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் உடலைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழுததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
