ஃப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.

இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் டெல்லியில் மாலை 3:30 மணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 67வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கெய்ஜ்வாட் மற்றும் கான்வே  சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 


இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடியில் டெல்லியின் குல்தீப் யாதவ் வீசிய 12 ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார் ருதுராஜ். அவர் 50 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.தொடர்ந்து வந்த துபே 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்டு 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த கான்வே 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஜடேஜா 20 ரன்னுடனும், தோனி 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 223 ரன்களை குவித்தது. இதனால், டெல்லி அணிக்கு 224 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணி தரப்பில் சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 5 ரன், பிலிப் சால்ட் 3 ரன், ரீலி ரோசவ் 0 ரன், யஷ் துல் 13 ரன், அக்சர் படேல் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர்.களத்தில் தனி ஒருவனாக போராடிய கேப்டன் வார்னர் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், லீக் சுற்றின் முடிவில் சென்னை 14 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று பிளேஆஃப்-க்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியல் 2வது இடத்தில் நீடிக்கிறது.

From around the web