மும்பையை 'வாஷ் அவுட்' செய்த சிஎஸ்கே.. 103 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி!
ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் 'எல் கிளாசிகோ' என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று (ஏப். 23) மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இதில் அதிரடியாக விளையாடிய சென்னை அணி, மும்பையை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஆரம்பம் முதலே மும்பை பந்துவீச்சைச் சிதறடித்தார். அபாரமாக விளையாடிய அவர், இந்தத் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து (101* ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் (22) மற்றும் டிவால்ட் பிரேவிஸ் (21) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
208 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் புகுந்த மும்பை அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. சென்னை பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலில் குயின்டன் டி காக் (7), மலேவர் (0) மற்றும் நமன் திர் (0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். 11 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை தத்தளித்தது.

மத்திய வரிசையில் திலக் வர்மா (37) மற்றும் சூர்யகுமார் யாதவ் (36) ஜோடி ஓரளவிற்குப் போராடியது. ஆனால், சென்னை வீரர் அகீல் ஹொசைன் தனது சுழற்பந்து வீச்சால் இந்த ஜோடியைப் பிரித்ததுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சரித்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் வெளியேற, மும்பை அணி 19 ஓவர்களிலேயே 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
