இன்று சென்னை–ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை... பிளே ஆப் வாய்ப்பைத் தக்கவைக்குமா சென்னை?
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில் இன்று (மே 18) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. சென்னையின் புகழ்பெற்ற சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்த விறுவிறுப்பான போட்டி தொடங்குகிறது. நடப்புத் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான போட்டி தற்பொழுது இறுதிவடிவம் பெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கான தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது. கடந்த போட்டிகளில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் காட்டச் சென்னை வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் பலமாக நீடிக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் சாதகமும் ரசிகர்களின் பேராதரவும் இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் பஞ்சம் இருக்காது. இரு அணிகளின் இந்த இமாலய மோதலைக் காணக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.
