5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கடலூர் முதியவருக்கு 20 ஆண்டு சிறை!
கடலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 56 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை மிரட்டிய முதியவர்
கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்த ரவி (56), கடந்த 2024-ம் ஆண்டு கடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியைக் கைது செய்தனர்.
நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரவிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.
