“தவெக நிர்வாகி உள்ளிட்ட 7 பேர் கைது!” - வேலைவாய்ப்பு ஏஜென்ட்டை காரில் கடத்தியதாக பரபரப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வேலைவாய்ப்பு ஏஜென்ட்டை அவரது வீட்டில் இருந்து குண்டுகட்டாக தூக்கி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படும் வழக்கில் தவெக நிர்வாகி காளீஸ்வரன், அபிராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த பரத் சூர்யா என்பவர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதற்காக சிலர் பணம் கொடுத்ததாகவும், பின்னர் அந்தப் பணத்தை திருப்பிக் கேட்டதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பரத் சூர்யா வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சிலர் அவரை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்து காரில் ஏற்றிச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தவெக நிர்வாகி காளீஸ்வரன், அபிராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரத் சூர்யாவிடம் வெளிநாட்டு வேலைக்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது, பணத்தை திருப்பிக் கேட்பதில் ஏற்பட்ட தகராறுதான் கடத்தலுக்கு காரணமா, அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, சம்பவத்தின் முழுமையான பின்னணியை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு ஏஜென்ட்டை அவரது வீட்டிற்குள் புகுந்து கடத்திச் சென்றதாக கூறப்படும் சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
