கடலூர் கொலையில் திடீர் திருப்பம்... யூ-ட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொடுத்த சிறுவன்!

 
யூ-ட்யூப்

கடலூர் அருகே கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (31) என்ற கார் ஓட்டுநர், புதுச்சேரி எல்லை அருகே உள்ள இரட்டைச்சாவடியில் தனது காரை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மக் கும்பல், சசிக்குமார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், கத்தியால் கொடூரமாக வெட்டியும் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி 8 பேரைக் கைது செய்தனர்.

ட்ர்

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் யூடியூப்  வீடியோக்களைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கக் கற்றுக் கொண்டது தெரிய வந்தது. அந்தச் சிறுவன் தான் தயாரித்த நாட்டு வெடிகுண்டுகளை இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலிடம் வழங்கியுள்ளான்.

காவல்துறையினருக்குச் சந்தேகம் வராதவாறு, நாட்டு வெடிகுண்டுகளைக் கீரைக்கட்டுகள் மற்றும் கோலமாவுக்குள் மறைத்து வைத்துச் சம்பவ இடத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.