பாதிக்கப்பட்ட 4000 மாணவர்களுக்கு CUET மறுதேர்வு... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான சிஇயுஇடி நுழைவுத் தேர்வுக்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் 6 மற்றும் 7 ம் தேதிகளில் இந்த மறுதேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன. ஏற்கனவே நடைபெற்ற தேர்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாகப் பல தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதால் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பக் கோளாறுகளால் நாடு முழுவதும் சுமார் 4000 மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

மறுதேர்வுக்குத் தகுதியான மாணவர்கள் தங்களின் விவரங்களைப் பதிவிட்டு இணையதளத்தில் இருந்து நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நேரங்கள் குறித்த முழுமையான விபரங்கள் அந்த நுழைவுச்சீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
