மனைவிக்கு அரிவாள் வெட்டு... கணவர் வெறிச்செயல்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில், “தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி நடு தெரு பகுதியை சேர்ந்த ஜெயசங்கரபாண்டியன் மகன் கொம்புக்கனி (35). கூலி தொழிலாளியான இவரது மனைவி முத்துலட்சுமி (30). குடும்ப பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கொம்புக்கனி வீட்டில் இருந்த அரிவாளால் முத்துலட்சுமி தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.

பின்னர் முத்துலட்சுமியை மீட்டு கழுகுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து கொம்புக்கனியை கைது செய்தார்.
