க்யூட் வீடியோ... ஒரே நேரத்தில் நீச்சல் குளத்தில் குதித்து 296 நாய்கள் அசத்தல் - அமெரிக்காவில் கின்னஸ் சாதனை!
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள நீர் பூங்காவில், 'தேசிய நாய் வாரத்தை' முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்டமான நாய் பூல் பார்ட்டியில் 296 டூடுல் ரக நாய்கள் ஒரே நேரத்தில் நீச்சல் குளத்தில் குதித்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளன.
லாஸ் வேகாஸில் உள்ள கவபங்கா கேன்யன் நீர் பூங்காவில் 'டூடுல் பலூசா 2026' என்ற பெயரில் இந்த விழா நடைபெற்றது. கின்னஸ் அமைப்பின் நடுவர் முன்னிலையில் கணக்கிடப்பட்ட இந்த நிகழ்வு, "உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான நாய்கள் பங்கேற்ற பூல் பார்ட்டி" என்ற சாதனையை அதிகாரப்பூர்வமாக வென்றுள்ளது.
கடந்த மே மாதம் புளோரிடாவில் 277 நாய்கள் பங்கேற்றதே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், தற்போது 296 நாய்கள் பங்கேற்று அந்த சாதனையை நெவாடா முறியடித்துள்ளது.
'டூடுல் ரெஸ்க்யூ யுஎஸ்ஏ' என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் திரட்டப்பட்ட முழுத் தொகையும், கைவிடப்பட்ட டூடுல் நாய்களை மீட்பதற்கும், அவற்றுக்கான அவசர மருத்துவச் செலவுகள் மற்றும் உணவுத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில், அலை குளம் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் பகுதிகளில் நாய்கள் தங்கள் உரிமையாளர்களுடன் இணைந்து குதூகலமாக நீந்தி விளையாடின. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
