சமாதான பேச்சுவார்த்தை தோல்வி - சென்னையில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகம் மூடல்!

 
சி.வி.சண்முகம் சி.வி.சண்முகம்

அதிமுகவில் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனி அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில், சி.வி.சண்முகம் முற்றிலும் தனித்து விடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் இயங்கி வந்த அவரது தற்காலிக அரசியல் அலுவலகம் இன்று மாலை அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகத் தவெக அரசுக்கு ஆதரவளிப்பது மற்றும் அதிமுக கொறடா உத்தரவை எதிர்ப்பது போன்ற முக்கிய முடிவுகள் அனைத்தும் சென்னையில் உள்ள சி.வி.சண்முகத்தின் தற்காலிக அலுவலகத்தில்தான் ஆலோசிக்கப்பட்டு வந்தன.

சி.வி.சண்முகம்

எஸ்பி வேலுமணி இபிஎஸ் உடன் சமாதானமாகி மன்னிப்புக் கடிதம் கொடுத்ததைத் தொடர்ந்து, சி.வி.சண்முகத்தின் பின்னால் அணிவகுத்து நின்ற மாவட்ட நிர்வாகிகளும், ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்குத் தங்களது ஆதரவை மீண்டும் தெரிவித்துவிட்டனர்.

தன்னை நம்பியவர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கத்திற்குத் தாவியதால் அதிர்ச்சியடைந்த சி.வி.சண்முகம் தரப்பு, சென்னையில் இருந்த தங்களது தற்காலிக அலுவலகப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இதையடுத்து அங்கிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு, நிர்வாகிகள் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுத் தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்பினர்.

அலுவலகம் மூடப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் மீண்டும் இணைந்து செயல்படப் போவதில்லை என்ற தனது பிடிவாதமான முடிவில் சி.வி.சண்முகம் மிக உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

சிவி சண்முகம்

இதுகுறித்துத் தனது மிக நெருங்கிய ஆதரவாளர்களிடம் அவர், "அரசியலில் கொள்கையும் சுயமரியாதையும் தான் முக்கியம். சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் மாறும் எண்ணம் எனக்கு இல்லை. எனது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. நாளை எனது கடிதத்தைச் சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் ஆளும் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 120 ஆகக் குறைந்துள்ள இக்கட்டான நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரான சி.வி.சண்முகத்தின் இந்தத் தனிப்பாதையும், அலுவலக மூடல் மற்றும் ராஜினாமா அறிவிப்பும் தமிழக அரசியல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.