நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவன மேலாளரிடம் ரூ.38 லட்சம் பணமோசடி - சைபர் கிரைமில் புகார்!

 
கமல் கமல்ஹாசன்

திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனத்தில், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ய முயன்ற  சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் மிகவும் திட்டமிட்டு இந்த மோசடிச் செயலை அரங்கேற்ற முயன்றுள்ளனர். 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய ஊழியர் ஒருவரின் செல்போனை வட மாநிலத்தைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகள் குழு ஒன்று  ஹேக் செய்து முதற்கட்டமாகத் தடயங்களைச் சேகரித்துள்ளது. பின்னர், அந்த நிறுவனத்தின் உயர் தயாரிப்பாளரின் வாட்ஸ்அப் புகைப்படத்தை அப்படியே நகலெடுத்துப் பயன்படுத்தி, அந்த ஊழியரிடம் அவசரமாகப் பணம் தேவைப்படுவது போல வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.

கொரோனாவிலிருந்து  குணமடைந்து  வீடு திரும்பிய கமல்!!

உண்மையான தயாரிப்பாளர் தான் பேசுகிறார் என நம்ப வைக்க முயன்ற அந்த கும்பல், குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு உடனடியாக ரூ.38 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யுமாறு கேட்டுள்ளது. சந்தேகமடைந்த அந்த ஊழியர், இது குறித்து உடனடியாக நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்துள்ளார். அப்போதுதான் அது தயாரிப்பாளரின் எண் அல்ல என்பதும், தங்களது நிறுவனப் பணத்தைச் சுருட்ட வட மாநிலக் கும்பல் ஒன்று திட்டமிட்டு ஹேக்கிங் செய்திருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறாதவாறு தடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகம், இந்த நூதன சைபர் மோசடி முயற்சி குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் விரிவான புகாரை அளித்துள்ளது. புகாரைப் பெற்றுக்கொண்ட தனிப்படை போலீசார், ஹேக் செய்யப்பட்ட எண்கள் மற்றும் அந்த வட மாநிலக் கும்பலின் ஐபி முகவரிகளை வைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.