தீவிரமடையும் அக்வான் புயல்... சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு அதிகனமழை அலர்ட்!
வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 16) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புயலுக்கு 'அக்வான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (நவம்பர் 17) தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் இந்த 3 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நவம்பர் 18-ம் தேதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
