அர்னாப் புயல்.. எண்ணூரில் கடல் சீற்றம்... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கடல் நீரால் போக்குவரத்து முழுவதுமாக தடை!

 
கடல் எண்ணூர் சாலை

சென்னையை அடுத்த எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய அளவில் ஆக்ரோஷமாக எழுந்து வருவதால் கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எண்ணூரில் உள்ள பாரதியார் நகர் கடற்கரைப் பகுதியில் கடல் அலைகள் எழும்பி, அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டிச் சாலைகளில் பாய்ந்தோடுகின்றன.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'அர்னாப்' அதி தீவிரப் புயல் ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதன் நேரடித் தாக்கமே சென்னைக் கடலோரப் பகுதிகளில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலைக்குக் காரணமாகும். புயலின் வேகம் மற்றும் திசை காரணமாகக் கடல் அலைகளின் உயரம் பல அடி தூரத்திற்கு உயர்ந்துள்ளதுடன், கடற்கரைச் சாலையின் மறுபுறம் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் கடல்நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.

க்ச்க்

இதன் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் கடலலைகளின் கடுமையான தாக்கத்தால் நிலைதடுமாறிக் கவிழ்ந்தன. பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குப் பக்கம் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எண்ணூர் கடற்கரைச் சாலையில் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் சிரமமடையாத வண்ணம், அப்பகுதியைக் கடக்கும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதைகளில் பாதுகாப்பாக இயக்கப்பட்டுக் வருகின்றன.

அர்னாப் புயல்

காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் கடற்கரைப் பகுதிகளில் முகாமிட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் முழுமையாகக் கரையைக் கடந்து இயல்பு நிலை திரும்பும் வரை கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.