அர்னாப் புயல் எச்சரிக்கை.. புதுச்சேரி ஏனாமில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
Oct 27, 2026, 08:20 IST
வங்கக் கடலில் வலுவடைந்துள்ள 'அர்னாப்' தீவிரப் புயல் காரணமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
'அர்னாப்' புயல் ஆந்திரா - ஏனாம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏனாமில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 28 ஆகிய 2 நாட்கள் விடுமுறை வழங்கிப் புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
புயல் காரணமாகப் பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
