தமிழ்நாட்டை நோக்கி வரும் 'முரசு' புயல்... தமிழில் பெயர் சூட்டி இந்தியா கெளரவம்!
இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் சுழற்சி முறையில், அடுத்து உருவாகும் புயலுக்கு இந்தியா சார்பில் 'முரசு' என்ற அழகான தமிழ்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதற்கிடையே நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட 13 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ள உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, புயல்களுக்கான பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகரவரிசைப்படி சூட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அடுத்து உருவாகும் புயலுக்கு இந்தியா பரிந்துரைத்துள்ள 'முரசு' என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் புயல்களுக்கு அக்வன் (ஈரான்), கானி (மாலத்தீவு) போன்ற பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
