தீவிரமடையும் 'முரசு' புயல்... திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

 
ஆரஞ்சு

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'முரசு' புயலாக மாறியதை அடுத்து, வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'முரசு' புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிரப் புயலாக மாறக்கூடும் என்றும், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து நெல்லூர் - நரசப்பூர் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்: முரசு புயலின் தாக்கம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 115 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட்டும், நாளை (நவம்பர் 2) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வருவாய்த் துறை மற்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.