வலுவடையும் புயல் சின்னம்... கப்பல்கள், விமானங்களுடன் தயார் நிலையில் இந்தியக் கடலோரக் காவல்படை!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுப் புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்தியக் கடலோரக் காவல்படை தனது கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பலமடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் வகையில் அனைத்துக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால், மாறிவரும் வானிலைச் சூழலைக் கடலோரக் காவல்படையின் ரேடார் நிலையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆழ் கடலில் உள்ள மீனவர்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் பிற கடல் பயணிகளுக்கு உரிய நேரத்தில் வானிலை எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்கக் கப்பல்கள் மற்றும் வானூர்திகள் மூலம் கடல் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் உள்ள தொலைநிலை செயல்பாட்டு நிலையங்கள் மூலம், மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் சென்றடைவதை உறுதிசெய்யப் பிராந்திய மொழிகளில் வானிலை எச்சரிக்கைகள் உயர் அலைவரிசை கருவிகள் வழியாகத் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதுடன், உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துறைமுக அதிகாரிகளுக்கும் தொடர்ந்து தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புயல் சின்னத்தால் ஏற்படக்கூடிய எத்தகைய அவசர காலச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் கடலோர மாநிலங்களில் மீட்புப் படைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடற்கரைப் பகுதிகளில் அவசர காலச் சூழல்களைக் கையாள்வதற்காக இந்தியக் கடலோரக் காவல்படையின் பேரிடர் மீட்புக் குழுக்கள் முழுத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தேவைப்படும் பட்சத்தில், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் அனைத்துக் கப்பல்களும் விமானங்களும் எந்த நேரத்திலும் செயலாற்றத் தயாராக உள்ளன.
கடல்சார் பாதுகாப்பில் தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, இந்தியக் கடலோரக் காவல்படையானது சிவில் நிர்வாகம், துறைமுக அதிகாரிகள் மற்றும் பிற கடல்சார் அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணி வருகிறது. எத்தகைய இக்கட்டான சூழல் ஏற்பட்டாலும், அதற்கு விரைவாகவும் திறம்படவும் பதிலளித்து உயிர்களையும் உடைமைகளையும் காக்கத் தங்களது படைப்பிரிவு முழு விழிப்புடன் இருப்பதாகக் கடலோரக் காவல்படை உறுதியளித்துள்ளது.
