தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - தமிழகம், புதுவையில் உள்ள 9 துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது. இது மேலும் தீவிரம் அடையக்கூடும் என்பதால், தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய 2 துறைமுகங்கள் உட்பட மொத்தம் 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வடக்கு உள் கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள் கர்நாடகா வழியாகக் காற்றழுத்த தாழ்வுப் பாதை ஒன்றும் நீடித்து வருகிறது. இதன் தாக்கத்தால், ஈரோடு, நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் பல்வேறு உள் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
