சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு! சிகிச்சை பலனின்றி தாயும் மகனும் மரணம்!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நாவலூரில் நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த வைரமுத்துவின் குடும்பத்தினர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 15ம் தேதி அதிகாலை, நாவலூர் சாமுண்டீஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து விழுந்ததில், மற்றொரு பகுதியில் வசித்து வந்த சஞ்சீவி - சோனியா தம்பதியின் குழந்தைகளான கிருத்திகா (4) மற்றும் தீரன் (1.5) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமையல் தொழிலாளி வைரமுத்து (45) கடந்த 23ம் தேதி உயிரிழந்தார்.

அவரைத் தொடர்ந்து 70 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வைரமுத்துவின் மனைவி செல்வி (40) மற்றும் அவரது 7 வயது மகன் பிரதீப் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தனர் இதன் மூலம் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட வேண்டிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உள்ளிட்ட எவ்விதப் பொருளாதார உதவிகளையும் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில், தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
