மே 1 முதல் சிலிண்டர் விலை உயர்வு?! - இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி
தமிழகத்தில் மே 1-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்ற தகவல் இல்லத்தரசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ) சென்னையில் இன்று ஒரு சிலிண்டரின் விலை ₹928.50 ஆக உள்ளது. (கடந்த மார்ச் மாதம் ₹60 உயர்த்தப்பட்ட பிறகு இந்த விலையிலேயே நீடிக்கிறது). வணிக பயன்பாட்டு சிலிண்டர் (19 கிலோ) விலை சுமார் ₹2,246.50 ஆக உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹103.50-க்கும், டீசல் ₹90.03-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்ப் போக்கிற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைப்பது வழக்கம். மே 1-ஆம் தேதி வரவிருக்கும் மாற்றம் குறித்துப் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்வு இப்போது அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைச் சரிசெய்ய இந்த விலை உயர்வு அவசியமாகக் கருதப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என்ற நிலை உள்ள சூழலில், மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த உயர்வு இன்னும் தீவிரமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ₹25 முதல் ₹28 வரை உயரும் என்று பரவி வரும் சில செய்திகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மறுத்துள்ளது. இத்தகைய செய்திகள் தவறானவை என்றும், தற்போதைக்கு அது போன்ற பெரிய அளவிலான உயர்வு குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், மாதந்தோறும் நடக்கும் வழக்கமான மாற்றங்களின்படி சிலிண்டர் விலையில் சிறிய அளவில் ஏற்றம் இருக்கக்கூடும் என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.
