சிலிண்டர் மானியம் இவர்களுக்கெல்லாம் கட்? மத்திய அரசு கட்டுப்பாடு - '7 நாட்கள்' கெடு!
வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இனி சிலிண்டர் மானியம் முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பொருளாதார ரீதியாக நன்கு வசதி படைத்தவர்களுக்கான சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு இனி சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட மாட்டாது. கணவன் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தையும் சேர்த்தே இந்த ரூ.10 லட்சம் என்ற வருமான வரம்பு கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியை அமல்படுத்தும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன. அதில், உங்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்குள் தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தக் கோரி விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த எஸ்எம்எஸ் வந்த 7 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தகுந்த விவரங்களை வழங்கி பதிலளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அல்லது 7 நாட்களுக்குள் எவ்வித பதிலும் அளிக்காத நுகர்வோருக்கு தானாகவே சிலிண்டர் மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த சில காலங்களாகவே நேரடி மானியத் திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கான தொகையை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு, தற்போது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு மானியமாக வெறும் ரூ.24.50 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானம் அதிகம் உள்ளவர்கள் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கக் கோரிய மத்திய அரசு, தற்போது இந்த 7 நாட்கள் கெடுவுடன் கூடிய எஸ்எம்எஸ் கட்டாயத்தின் மூலம் மானியக் கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
