கேஸ் சிலிண்டர் முன்பதிவில் புதிய மாற்றம்: மத்திய அரசு அதிரடி விளக்கம்!

 
கேஸ் சிலிண்டர் கேஸ் சிலிண்டர்


சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு மாற்றப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சிலிண்டர் முன்பதிவு இடைவெளி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கிளம்பிய தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், பழைய நடைமுறையே தற்போதும் அமலில் இருப்பதாகவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களின் தேவையைப் பொறுத்து சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம் எனத் டெல்லியில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்திற்குப் பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வணிக சிலிண்டர்

தற்போதைய நடைமுறைப்படி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் 45 நாட்களுக்குப் பிறகும் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும், உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கும் இதே விதிகளே பொருந்தும் என்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் போதிய அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதால், தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சோட்டு சிலிண்டர்

அதே சமயம், ஏப்ரல் மாதம் முதல் சிலிண்டர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி சிலிண்டர் முன்பதிவின் போது கைபேசிக்கு வரும் ரகசிய எண் அல்லது ஆதார் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போலி இணைப்புகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் மானியம் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, தவறான தகவல்களை நம்பிப் பதற்றமடைந்து கூடுதல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.