ஏசி பழுதுபார்க்கும் கடையில் வெடித்துச் சிதறிய சிலிண்டர் ... மக்கள் அலறியடித்து ஓட்டம்!

 
சிலிண்டர் வெடித்து தீ விபத்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் இயங்கி வந்த குளிர்சாதனப் பெட்டி பழுதுபார்க்கும் கடையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஊழியர்கள் வழக்கம்போல பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு இயந்திரத்தில் இருந்து தீப்பொறி கிளம்பி மளமளவென கடை முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உயிரைக் காத்துக் கொள்ள வெளியே ஓடி வந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்தச் சத்தம் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவு வரை கேட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

1

விபத்து குறித்துத் தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தின் போது ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்ததுடன், அருகில் இருந்த மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் முன்கூட்டியே வெளியேறியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமா என்பது குறித்துத் திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பாதுகாப்பு கருதி மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.